Quotes – Tamil

யோகி ராம்சுரத்குமார்

  1. 1952 ம்வருடம் சுவாமி ராமதாசரின் தாமரை திருவடிகளில் இந்த பிச்சைக்காரன் இறந்து விட்டான். அதன்பிறகு இவனின் ஒவ்வொரு எண்ணமும் சொல்லும் செயலும் இந்த பிரபஞ்சத்தை இயக்கிவரும் தந்தையினாலேயே இயக்கப்பட்டு வருகிறது.
  1. இந்தபிச்சைக்காரனின் ஒவ்வொரு அசைவும் சிறியதோ பெரியதோ அது என் தந்தையின் பணியுடன் இணைந்ததே. வெறும் உடல் அசைவு அல்ல. இந்த பிரபஞ்சமும் அதிலுள்ள எல்லாமும் ஒன்றுக்கொன்று இணைந்த ஒரு முழுமையே. இங்கிருக்கும் பொருட்களை இவன் ஏதேனும் மாற்றி அமைத்தால் உடனே சூழ்நிலையே மாறிவிடும். பிரபஞ்ச அளவில் அதன் பாதிப்பு இருக்கும்.

இவன் மிக மிக ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். இந்த பிச்சைக்காரன் மாற்றங்களை விரும்புவது இல்லை.

  1. சுவாமிராமதாசரின் காலடியில் இறந்த பிறகே இவன் உயிர்வாழ்க்கை தொடங்கியது. என்ன! அதிலிருந்தே இவன் இந்த மாதிரியான உன்மத்த நிலையிலேயே வெகுகாலமாக வாழ்ந்து வருகிறான். இவன் ஒரு பைத்தியம். அந்த பைத்திய நிலையில் என்ன செய்வான்? ஏது செய்வான்? என்பது தெரியாது! எல்லாம் தந்தைக்கே தெரியும். அச்சமயம் மற்றவர்கள் இவன்மேல் வைக்கும் நம்பிக்கையை தகற்த்தெரியும்படிகூட நடப்பது உண்டு. ஆனால் பூர்வ ஜன்ம புண்ணியம் உள்ளவர்களும் ஏற்கனவே மகாத்மாவுடன் வாழ்ந்தவர்களும் இவன் மேல் அன்பு வைத்து இவனுக்காகவே சேவை செய்பவர்களும் இவனை விட்டு எக்காலத்தும் நீங்கமாட்டார்கள். எல்லாம் தந்தையின்லீலையே! என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு எதுவும் இல்லை. வேறு எவரும் இல்லை
  2. இங்குவரும் மக்கள் அனைவரையும் பார்த்து அருகில் கூப்பிட்டுப் பேசிப் பழகுவது என்பது இந்தபிச்சைக்காரனின் வேலையில் மிகமிகச் சிறிய பகுதியே. இவனுடய முழு நேர வேலை மிகவும் ரகசியமானது.அதுபிரபஞ்ச அளவில் நடைபெறுகிறது. யாரும் அறியாமலேயே செய்யப்படுகிறது.
  3. இந்தபிச்சைக்காரன் ஒரு வேலையும் செய்வது இல்லை. இவனால் சமுதாயத்திற்கு ஒரு உதாரணமாய்வாழ்ந்து காட்ட முடியாது. இந்த பிச்சைக்காரன் குளிப்பது கூட இல்லயே! இவன் வெறுமனே சாப்பிடுவது, நீங்கள் யாராவது கொடுக்கும் காசில் சிகரெட் வாங்கி புகைப்பது அல்லது தூங்குவது – இதைத்தான் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறான்.
  4. “அவதூதர்கள்” என்றுசொல்லப்படும் ஞானிகள் பெரிய மகாத்மாக்கள். அவர்கள் எந்த விதிக்கும்கட்டுப்பட்டவர்கள் அல்ல. அதனாலேயே அவர்களால் உதாரண புருஷர்களாய் இருக்க முடியாது.
  5. காஞ்சிபரமாச்சார்யர் ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் போன்ற பெரிய மகாத்மாக்களும் மற்ற சிலமடாதிபதிகளும் உள்ளனர்.  அவர்கள் நம்மையறிந்த முக்தபுருஷர்களாய் இருந்தாலும் சாஸ்திரங்கள்சொல்வதன்படி

நடப்பவர்கள். அவர்களே சமுதாயத்திற்கு முன் மாதிரியாக நின்று வழிகாட்டுவர். ஆனால் சிலசமயங்களில் தந்தை (தன்னை சுட்டிகாட்டிய வண்ணம்) இது போன்ற பிச்சைக்கார்ர்களையும் அனுப்புவதுஉண்டு. எங்களை போன்றவர்கள் (அப்போது சன்னதி தெரு வீட்டு வாசல் வழியள சில பன்றிகள் சென்றுகொண்டு இருந்தன) ஓ! சரி, சரி! எங்களை போன்றவர்களுக்கு அதோ அந்த வராகம் மாதிரி அங்கங்கு உள்ளவேண்டாத அழுக்குகளை சாப்பிடுவதே வேலை.

  1. நீங்கள்ஒரு காரியத்தைச் செய்வது ஒரு மாதிரி. அதே காரியத்தை இந்த பிச்சைக்காரன் செய்தால் அது வேறுமாதிரியாகிவிடும். இரண்டும் ஒன்றல்ல.
  2. யோகிராம்சுரத்குமார் எங்கிருக்கிறார்? (மலர்ந்த புன்சிரிப்பு) – (சுற்றி இருக்கும் அன்பர்களை ஒருமுறைபார்த்துவிட்டு  மீண்டும் சிரிப்புடன் தன் தலையில் இருந்து பாதம் வரை சுட்டிகாட்டியவண்ணம்) அவர் இதிலிருந்து இதுவரை மட்டுமே இருப்பதாக நினைக்கிறார்கள்! யோகி ராம்சுரத்குமார் இங்கு, அங்கு, எங்கும் இருக்கிறார்? அவர் உங்கள் எல்லோர் இடத்திலும் இருக்கிறார். நீங்கள் அனைவரும் அவரிடத்தில் இருக்கிறீர்கள். இந்த பிச்சைக்காரன் இல்லாத இடமே இல்லை.
  3. (சன்னதிதெரு வீட்டை காட்டி) இது என் தந்தையின் குடிசையே! தந்தைதான் இந்த பிச்சைக்காரனுக்கு உணவு அளிக்கிறார். தந்தைதான் இவனை பார்த்துகொள்கிறார்.
  4. (அவருடைய அழகிய, பெரிய ஆஸ்ரமத்தில் அமர்ந்தவண்ணம்) இந்தப் பிச்சைக்காரன், பிச்சைக்காரனாகவே பிறந்தான்.

பிச்சைக்காரனாகவே வாழ்கிறான். பிச்சைக்காரனாகவே இறப்பான்.

  1. தந்தையின் பணியில், இந்தப் பிச்சைக்காரன் பல விதமான கஷ்டங்களை சந்திக்க நேரிடுகிறது! என்றைக்கு இந்த

பிச்சைக்காரனுக்கு தந்தை தெய்வீக பைத்தியத்தை (உன்மத்தம்) தந்தாரோ, அன்றிலிருந்தே இப்படித்தான்! … (சிரிப்பு)

  1. இந்தப் பிச்சைக்காரன், தந்தையின் பணிக்காக மட்டுமே உயிர் வாழ்கிறான். கடவுளின் பணியோ புரிந்துகொள்ள

முடியாத போக்கை உடையது. இந்த பிரபஞ்சம் முழுவதும் அந்த பணியில் அடக்கம். அதனால்தான் இவ்வளவு கஷ்டங்கள்.

இவனுடைய வேலை, இந்த பிரபஞ்சம் முழுமையும் குறித்துதான்!

  1. தந்தை, இந்தப் பிச்சைக்காரனின் ஒவ்வொரு கணப்பொழுதையும், அவருடைய பணிக்கு உபயோகித்துக் கொள்கிறார்.

குளிப்பதற்கோ, தலைவாருவதற்கோ, ஆடை மாற்றுவதற்கோ, இவனுக்கு நேரமில்லை.

  1. “தாங்கள் அரிய பெருநிலை அடைந்த பின்னும்,இப்படி வெகுகாலமாக ஓயாது உழைத்துக்கொண்டு இருக்கிறீர்களே!

ஏன்? ” என்று ஒரு பக்தை கேட்டார். பகவான் அதற்கு, “ஏன் மரம் கனிகளைக் கொடுக்கிறது? ஏன் சூரியன் ஒளியைக்

கொடுக்கிறான்? ஏன் மேகங்கள் மழையாக பொழிகிறது?  ஏன் காற்று வீசுகிறது?” என்று கூறி பலமாக சிரித்தார்.

  1. யோகி ராம்சுரத்குமார் என்பது,நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த உருவம் அல்ல. வெறும் பெயரும் அல்ல. அது பேரனுபவம். பேருணர்வு.
  2. ஒரு முறை, ஒரு நண்பரின் புத்தகத்தில், இந்தப் பிச்சைக்காரன் 🕉 என்று கையெழுத்து இட்டபொழுது, அவர் “யோகிராம்சுரத்குமார்” என்று கையெழுத்திடும்படி பெரிதும் வேண்டினார். பிச்சைக்காரன், “🕉 என்பது என்னுடைய முதல் பெயர். எல்லாவற்றிலும் சிறந்த பெயர்” என்று சொன்னான்.
  3. நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் இருக்கறீர்கள். நான் உங்கள் எல்லார் இடத்திலும் இருக்கிறேன். பகவத்கீதையில் கிருஷ்ணன் கூறியதுபோல், நீங்கள் எல்லோரும் மணிகளாய், என்னால்,என்னில் கோர்க்கப்பட்டுள்ளீர்கள். வேறு எதுவும் இல்லை. வேறு எவரும் இல்லை. யாரும் பிரிந்து தனியே இல்லை. பிரிக்க முடியாத, வகுக்க முடியாத முழுமை ஒன்றே இருக்கிறது. நுண்ணிய… மிக நுண்ணிய… மிகமிக நுண்ணியது முதல்… பெரிய, மிகப்பெரிய … மிகமிகப் பெரியது வரை எல்லாம் நானே. அருகிலும்… மிகமிக அருகிலும்… அப்பாலும், மிகமிக அப்பாலும் … அப்பாலுக்கு அப்பாலும் நான் ஒருவனே இருக்கிறேன். தொன்று தொட்டு… மிகமிக பழைய காலத்திலிருந்து… நிகழ்காலம், எதிர்காலம் …காலத்தின் எல்லை தாண்டியும் நானே இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறேன். நானே இந்த பிரபஞ்சமாயும் இருக்கிறேன்… (எல்லோரும் மெய்மறந்து கேட்டுக் கொண்டு இருந்த தருணத்தில், திடுமென்று பெருஞ் சிரிப்பு சிரித்து) ஆனால், இந்தப் பிச்சைக்காரன், எல்லோரிடமும். இந்த மொழியில் பேசமுடியாது! ஏதோ சில நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே இந்த மாதிரி பேசமுடியும்…. என்ன?  (சிரிப்பு)
  4. இந்தப் பிச்சைக்காரன் ஒரு சோம்பேறி. இவனால், எப்பொழுதும் சாப்பிடவும் தூங்கவும் மட்டுமே முடியும். ஆனால், நீங்கள் எல்லோரும்… கடுமையாக உழைக்கிறீா்கள். எல்லாம் என் தந்தை அருள்.
  5. இந்தப் பிச்சைக்காரனை தந்தை எப்படி வைத்தாலும்,எந்த சூழ்நிலையில் வைத்தாலும் சரிதான் இவனை மகிழ்ச்சியாக வைத்தாலும் சரிதான் துன்பத்தில் வைத்தாலும் சரிதான் இவனை ஆரோக்கியமாக வைத்தாலும் சரிதான் உடல்நலம் குன்றி வைத்தாலும் சரிதான்! தந்தையின் பணிக்காக மட்டுமே இவன் உயிர் வாழ்கிறான். தந்தையின் பணிக்கு எது ஏற்றதோ அதுவே சரி.
  6. (ஒரு 20 வயது பையன், சன்னதி தெரு வீட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த பகவானை நமஸ்கரித்து)” ஐயா, நீங்கள் கடவுளைக்

கண்டிருக்கிறீர்களா?” என்று ஆங்கிலத்தில் வினவினான். பகவான் அதற்கு, “கடவுளைத் தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லையே! வேறு ஏதேனும் இருக்கிறதா? என்று சட்டென்று கூறினாராம்.

  1. கடுமையான பிரச்சனைகளுக்குக் கூட, உடனுக்குடன் தீர்வுகூறும், பகவானைக் கண்டு வியந்த பக்தை ஒருவர், “இது எப்படி

முடிகிறது?” என்று வினவ, பகவான் பட்டென்று, “இந்தப் பிச்சைக்காரனுக்கு மனம் என்ற ஒன்று இல்லாததாலேயே அப்படி செய்ய முடிகிறது. எதையும் யோசித்து தீர்மானிப்பதற்கு, இந்த உடலில் வேறு யாரும் இல்லை. தந்தை மட்டுமே இருக்கிறாராம்” என்று சொன்னாராம்

  1. இந்தப் பிச்சைக்காரன், தந்தையைக் கேள்வி கேட்பதில்லை. தந்தை என்ன உத்தரவு இடுகிறாரோ, அதற்கு கீழ்ப்படிவது ஒன்றே இவன் அறிந்தது. தந்தைக்குத் தெரியும் எதைச் செய்வது, எப்பொழுது செய்வது, எப்படி செய்வது என்று!
  2. தந்தை இந்தப் பிச்சைக்காரன் பணியில் திருப்தியுடன் இருக்கிறார். அது ஒன்று போதும், இந்த பிச்சைக்காரனுக்கு, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்ன விமர்சனம் செய்கிறார்கள்? என்பது பற்றி அக்கறை இல்லை.
  3. ஒருமுறை பகவான், ஒரு பக்தையிடம், மிகவும் பச்சையாயும், கடினமாயும் இருந்த ஆரஞ்சு பழம் ஒன்றைக்கொடுத்து அதை தனக்கு உரித்து தரும்படி கூறினாராம் . அதை பக்தை உடனே உரிக்க ஆரம்பித்துவிட்டதும், ” இது மிகவும் புளிப்பாய் இருக்கும் போல் இருக்கிறதே ! இதைத் தந்த பக்தரின் நன்மையின் பொருட்டு, பகவான் இந்த புளிப்பை சாப்பிடப் போகிறாராம் பாவம் ” என்று நினைத்தவண்ணம், அந்த சுளைகளை ஒவ்வொன்றாய் பகவானிடம் கொடுக்க, பகவானும்,எந்த முகமாற்றமும் இல்லாமல், அதை விடாது சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். கடைசியில், ஒரு சுளையை, பக்தையிடம் நீட்ட, அதை வாங்கி உண்ட அந்த பக்தைக்கு, அது சுவை மிகுந்து இனிப்பாய் இருந்ததைக் கண்டு ஆச்சர்யமாய் போய் விட்டது. பகவான் அதற்கு, “பார்தாயா? தோற்றத்தைக் கண்டு உள்ளே இருப்பதை அறிய முடியாது. அதுபோல், இந்த அழுக்குப் பிச்சைக்காரனைப் பற்றியோ, அல்லது அவனுடைய பணியைப் பற்றியோ அறிந்து கொள்வது கஷ்டம். கடவுளின் செயல்கள் புதிரான போக்குடையவை” என்று சொன்னாராம்.
  4. இந்தப் பிச்சைக்காரனுக்கு மனம் என்ற ஒன்று இல்லாததினால், இவனால் எதையும்ன முன் கூட்டியே திட்டமிட இயலாது. இவனுக்கு, “இது வேண்டும்”, “அது வேண்டும்” என்று பிரார்த்தனை பண்ணும் சுதந்திரம் இல்லை. தந்தை எது செய்தாலும் சரிதான்.
  5. இந்திய நாட்டின் மண்கூட புனிதமானது. இங்கு வீசும் காற்றுகூட புனிதமானது. இந்தியா பெரிய பெரிய மஹாத்மாக்களின்

விளையாட்டுத் திருத்தலம். இது எங்களின் “லீலா பூமி”.

  1. பகவானின் புதிரான நடவடிக்கைப்பற்றி வினவிய அன்பர் ஒருவரிடம், “எதைப்பற்றிய முழு விவரமும் உனக்குத் தெரியாது; இந்தப் பிச்சைக்காரனுக்கு எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று தெரியும் . கூர்ந்து கவனித்துக்கொண்டு வா; ஒரு நாள் புரிந்து கொள்வாய்; தந்தை ஒரு காரியத்தை செய்ய உத்தரவிடும்பொழுது, இப்போதைய நேரம், இந்த சூழ்நிலை மட்டும் அல்ல, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் கொண்ட முழுமையிலேயே அதைச் செய்ய இயக்குகிறார். நாம் செய்ய வேண்டியது, “அவருக்கு எல்லாம் தெரியும்” என்ற நம்பிக்கை கொள்வதே.
  2. சுவாமி ராமதாஸாரின் காலடியில், இந்தப் பிச்சைக்காரன் இறந்தபிறகு, மனசாட்சி என்ற ஒன்றே இவனிடம் இல்லாமல் போய்விட்டது. மனம் என்ற ஒன்றே இல்லை. எது சரி, எது தவறு என்ற பாகுபாடும் போய்விட்டது. எல்லாம் அடித்துக்கொண்டு போய் விட்டன! மனசாட்சி அற்ற இவனிடம் தந்தை மட்டுமே இருக்கிறார்! ( சிரிப்பு) “அப்படி என்றால் இந்த பிச்சைக்காரன் என்று சொல்கிறீரீர்களே) இது யார்?” என்று கேட்ட பக்தரிடம் இந்த வடிவத்தை எல்லோரும் ஒரு தனி வியக்தியாக நம்புகிறார்கள். அதனால், இம்மொழியில் பேச வேண்டி இருக்கிறது. உண்மையில், ‘பிச்சைக்காரன்’ என்ற ஒன்றும் இல்லை” என கைவிரித்தார்.
  3. ஒருமுறை, ஒரு அயல்நாட்டுக்காரர் பகவானிடம், “நீங்கள் தெருவிலும்,மரத்தடியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே! நீங்கள் திருப்தியுடன் வாழ்கிறீர்களா? எப்பொழுதேனும், வாழ்வில் குறை இருப்பதாக உணர்ந்துண்டா?” என்று கேட்டார். உடனே பகவான், “இந்த பிச்சைக்காரன் மகிழ்ச்சியாக இருக்கிறானா அல்லது மகிழ்ச்சி அற்று வாழ்கிறானா என்பது முக்கியம் அல்ல. தந்தை, இந்த பிச்சைக்காரனை எப்படி வைத்தாலும் சரி,அது அவருடைய இச்சை. அவர் அப்பழுக்குகற்றவர். அதனால், அவர் எதை செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்று நம்பிக்கை இவனுக்கு உண்டு. (சிரிப்பு) அவரைத் தவிர வேறு ஒன்றும் உலகில் இல்லவே இல்லை” என்று கூறி சிரித்தார்.
  4. இந்த பிச்சைக்காரன் இந்த தெய்வீக உன்மத்த நிலையில் ஏதேதோ சொல்வான், செய்வான். இந்த அழக்குப் பிச்சைக்காரன், இந்த அசுத்தமான பாவி, சில அன்பர்களை அவனுடைய பெயரையே பாடப் சொல்கிறான்! சாஸ்திரங்கள், ஒருவர் தன் புகழைத் காது கொடுத்து கேட்பதையே தடை விதிக்கிறது. ஆனால், இந்த பிச்சைக்காரன்….?   கிருஷணாவதாரத்தில் தான் கிருஷ்ணனே தன் நாமத்தை பாடப் சொல்லிக் கூறுகிறார்.ஆனால், கிரூஷ்ணன் எங்கே?…. இந்த அழக்குப் பிச்சைக்காரன் எங்கே?(சிரிப்பு)
  5. இங்கு வரும் பொது, வெறுங்கையுடன் வாருங்கள். இவன், வாழைப்பழமோ, கல்கண்டோ, பூவோ கொடுக்கும் பொழுது, வெறுங்கையில் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த சமயம் பார்த்து, கையில் ஏதோ பொருளுடன் இவனிடம் கை நீட்டக் கூடாது. ஏனெனில், அவை வெறும் வாழைப்ழப்பழமோ, கல் கண்டோ அல்ல. அவை தந்தையின் அருளுடன் தொடர்பு கொண்டவை. ஏதோ ஒன்றை வைத்து, தந்தை அதைத் தருகிறார். ஆனால், சிலரால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போய் விடுகிறது. அது, அவர்களின் போறாத காலமே.
  6. யோகிகள் நெருப்புக்கு சமமானவர்கள். அவர்களூடன் விளையாடக்கூடாது.
  7. சில கிறிஸ்துவ பிரசாரகர்கள், பகவானைத் காண சந்நிதி தெரு வீட்டிற்கு வந்தனர். அவர்கள், பகவானிடம், “நாங்கள் மக்களுக்கு நிஜமான சேவை செய்கிறோம். ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், அநாதை இல்லங்கள் போன்றவை கட்டி, பராமரிக்கிறோம். தங்களைப் போன்றவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்க, பகவான் அருகிலிருந்த பக்தரைப் பார்த்தவண்ணம், “சூரியன் ஆஸ்பத்திரிகள் காட்டுகிறதா? அல்லது பள்ளிக்கூடங்கள் கட்டி,பயிற்றுவிக்கிறதா? அநாதை இல்லங்கள் நடத்துகிறதா? ஆனால், சூரியனின் ஒளியில் மற்ற அனைத்தும் நடைபெறுகிறது. யோகிகள் சூரியனைப் போன்றவர்கள்” என்று கூறி அழகாக சிரித்தார்.
  8. இவனின் உடல்நிலையை, தந்தை அவருடைய பணிக்கு ஏற்றார்போல் வைக்கிறார்.தந்தையின் பணி என்ன?இந்த பிரபஞ்சத்தின் ஒழுங்குப் பாட்டை நிலை நிறுத்துவதே.தந்தை,இவனை ஒரு மையமாக வைத்து, தன் பணிகளை செய்விக்கிறார்
  9. இந்த உன்மத்த நிலையும், பணியும் பெறுவதற்கு முன், இவனுக்கு புகைபிடிப்பது என்றால் சிறிதும் பிடிக்காது. யாரேனும் இவனிருக்கும் இடத்தில் புகைபிடித்தால் கூட, இவனுக்கு வயிற்றை புரட்டும். அவ்விடம் விட்டு நகர்ந்து விடுவான். ஆனால், தந்தை, தன் பணிக்காக ஏதோ காரணத்தினால்(சிரிப்பு) இந்த மாதிரி புகை பிடிக்கும் நிலையில் வைத்துள்ளார். இவனை உதாரணமாகப் பார்த்து, நிங்கள் எல்லேரும் புகைபிடிக்கக் கூடாது. இவனுடைய மனசாட்சியைதந்தை அகற்றிவிட்டார். ஆனால், நீங்கள் எல்லோரும் மனசாட்சிப்படியே நடந்துகொள்ள வேண்டும். எது சரியோ, அதை மட்டுமே செய்ய வேண்டும்.
  10. சிலர் இவனிடம் வந்து,”ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று சொல்கிறார்கள். வேறு என்ன இந்தப் பிச்சைக்காரன் செய்கிறான்? இவன் “ராம் ராம்” என்று சொன்னாலும், முதுகில் தட்டினாலும் அது ஆசீர்வாதமே. இது பலருக்கு புரிவதில்லை. இவன் என்ன செய்தாலும் அது ஆசீர்வாதமே. இவன் கோபம் கூட தந்தையின் ஆசீர்வாதம் தான்.
  11. பகவான், அந்த கிழிந்த அழுக்கு ஆடைகளுடனும், எண்னணயோ, வாரலோ அறியாத, முடிச்சு விழுந்த தலையுடனும் இருந்தபோதும், கம்பீரமாக, ஒரு பெரியசாம்ராஜ்ய சக்கரவர்த்தி போல் நடப்பதையும், வீற்றிருப்பதையும் கண்ட அன்பர் ஒருவர், உணர்ச்சிவசப்பட்டு, பரவச நிலையில் இரு கைகளையும் கூப்பியவாறு, “தாங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்?” என்று வினா, பகவான் உடனே ” வைகுண்டத்திலிருந்து” என்று சொல்லி பெருஞ் சிரிப்பு சிரித்தார். பக்தர் உணர்ச்சி பெருக்கிட்டு அழத் தொடங்கினார்.
  12. கடைசியாக, ஆஸ்பத்திரியில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, வலியில் வாட்டமுற்று, துன்புறுவதைக் கண்டு பொறுக்காமல்,பக்தை  ஒருவர்”கடவுள் ஏன் உங்களை இப்படி சித்திரவதைக்கு உள்ளாக்கிறார்? வாழ்நாள் முழுவதும் அவரிட்ட பணியைத் தவிர, வேறு எதுவும் தெரியாத உங்களுக்கு ஏன் இந்த நிலைமை?” என்று கண்ணீர் மல்க கேட்டார். பகவான் அமைதியுடன், தந்தை, பிரபஞ்சத்தில் எதோ ஒன்றை சரி செய்வதற்காக இந்தப் பிச்சைக்காரன் உடலை இப்படி வைத்துள்ளார்” என்று கூறினார்.
  13. அன்பர்கள் வேதனையுடன், ” பகவான், தாங்கள் எவ்வளவோ பேரை, கொடிய நோய்களிலிரூந்து, குணப்படுத்தி உள்ளீர்கள், தங்கள் உடலை, எங்களூக்காக, குணப்படுத்திக் கொள்ளக்கூடாதா?” என்று வினவ, பகவான் மீண்டும் அமைதியுடன் சுவாமி நித்தியானந்தர் கூறியதை நினைவுபடுத்தி,” அந்த சக்தி பக்தர்களின் நலனுக்காக மட்டுமே. இந்த உடல், மண்ணுக்கும். தூசிக்கும் சமம். அந்த சக்தி இந்த உடலுக்காக அல்ல” என்று கூறிவிட்டார்.
  14. பக்தர்களிடமிருந்து பலவிதமான துன்பங்களையும் துயரங்களையும் சுமந்து வந்திருந்த கடிதங்களை பகவானுக்கு படித்துகொண்டிருந்த பக்தை, மனம் கலங்கி“ பகவான், ஏன் இவ்வளவு துன்பம் உலகில்?” என்று வினவினார். பகவான் 4 அடி தூரத்தில் மிதியடியாய் போடப்பட்டிருந்த ஒரு சாக்குப்பையை சுட்டிக் காட்டி அதில் எழுதியிருந்த வாக்கியத்தை படிக்க சொன்னார். “ கல் குருணை நீக்கிய 1 திடம் அ ரிசி” என்று தமிழில் எழுதிஇருந்ததை படித்தவுடன. பகவான் புன்னகைத்து “துன்பங்கள் அதற்குத்தான், இப்பொழுது புரிகறதா?” என்று கேட்டார்.
  15. ஒரு ஆருத்ரா தர்சன நாளன்று அருணாசலேஸவரர் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பகவானை இங்கும், அங்கும் தேடி , கடைசியில் பிச்சைக்காரர்கள் மத்தியில் ஓர் ஓரமாய், அரச மரத்தடியில் பச்சை தலைப்பாகையுடனும் அழுக்கில் கருப்பாய் மாறியிருந்த கிழிந்த ஆடையில் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடனும் அமர்ந்திருப்பதை கண்ட பக்தை ஒருவர் , ஓடிச்சென்று , பகவான் அனுமதியுடன் அவர் அருகில் அமர்ந்து கொண்டார். வந்திருந்தவர்களில் ஒருவர் , “ இன்று சிவபெருமான், பார்வதி தேவிக்காகவும், சில நெருங்கிய பக்தர்களுக்காகவும் நடனம் புரிந்த நாள்” என்று கூற அமர்ந்திருந்த பக்தை ஆர்வத்தை கட்டுப்படுத்தமுடியாமல் “ இதோ இந்த சிவபெருமான் இன்றைக்கு மீண்டும் நடனம் செய்து எங்களை மகிழ்விப்பாரா? என்று கேட்டுவிட்டார். பகவான் புன்னகைத்து “ஏன் முடியாது?” என்று  கூறி விட்டு , வழக்கம்போல் அங்கு வந்திருந்த பக்தர்களுடன் அளவளாவி தன் வேலையில் முழ்கிவிட்டார். அசல் நிமிடங்களில் திடுமென்று , மேலே அரசமரத்து இலைகள் விரைவாக்சென்ற காற்றின் வேகத்தில் சல சலக்க , பகவான் “ அதோ பார், அந்த இலைகளை…… சிவபெருமான் நடனம் ஆடுகிறார்” என்றார். சிறிது நேரத்தில் மேலே வானில் பறந்து கொண்டிருந்த மூன்று பறவைகளை சுட்டிக்காட்டி“ அதோ பார் , சிவபெருமான் எவ்வளவு அழகாக நடனம் ஆடுகிறார்!” என்று வியந்தார். பிறகு பக்தையை நோக்கி “சிவபெருமான் எப்பொழுதும் நடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார், கவனித்துப்பார்” என்றார்.
  16. சுதாமா தோட்டத்தில் மூன்று நாட்களாக ஒரு மாங்காய் குரங்கினால் கடிக்கப்பட்டு, கீழே விழுந்து வெள்ளையும் கருப்புமாய் பூஞ்சக்காளான் படர்ந்து மண்ணில் கிடந்தது. இதை கவளித்து வந்த பகவான், திடுமென்று பக்தயை கூப்பிட்டு அதை எடுக்க சொன்னார். முழுவதும் மோசமான நிலையில் இருந்த அந்த மாங்காயிலும், நடுவில் ஓர் இடத்தில் மஞ்சளாய் இருந்த சிறிய பகுதியை சுட்டிக்காட்டி, பகவான் அதெ மட்டும் வெட்டி எடுத்து தனக்கு சாப்பிடதரும்படி கூறினார்.அதை உடன், உண்டதோடு அல்லாமல், அதில் சிறிதை பிரசாதமாய் பக்திக்கும் நீட்ட அது சுவை மிகுந்து இனிப்படன் இருப்பதைக் கண்ட பக்தை வியப்புடன் நோக்கினார். பகவான், அர்த்த முள்ள புன்னகையை உதிர்த்தார். அப்பொழுது தான், அந்த பக்தைக்கு அதன் பொருள் மனதில் உறைத்தது. தனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர் மிகவும் மோசமான்வாழ்க்கையில் ஈடுபட்டு, பலவிதங்களில் பாதிக்கப்பட்டு, துன்புறுவதை கண்ட பக்தைக்கு, அவரை போன்ற ஒருவருக்கு கடவுள் அருள் கிடைக்குமா? என்ற சிந்தனையில் இரண்டு நாட்களாக இருந்தார். பகவானின் இந்த லீலையினால் எப்படிப்பட்டவருக்கும் கருணாமூர்த்தியான இறைவனின் அருள் உண்டு என்று உணர்ந்தார்.
  17. வீட்டில் வேலைபார்க்கும் பெண்ணிற்கு அன்றைக்கு மீதம் இருந்த கறிகாய்களை பகவான், பிரசாதமாக கொடுத்தார். அப்பொழுது ஒரு நீண்ட பச்சை நற் பீன்ஸ் காய் கீழே விழுந்து விட்டது. அதைக் கவணியாது அந்த பெண் சென்று விட்டாள். பகவான், அருகிலிருந்த ஒரு பக்தயை பார்த்து “அதை உன்னால் சாப்பிடமுடியுமா?“ என்று வினவ  பக்தயையும் தயக்கமின்றி உடனே அதை கடித்து சாப்பிட்டுவிட்டார். அது மிக மிக சுவையாய் இருந்ததை வியப்போடு பகவானிடம் தெரிவித்தபோது, பகவான் புன்னகைத்து “சரணாகதி என்றால் என்ன என்று புரிந்து கொண்டாயா? என்று வினவினார்.
  18. சுதாமாவில் தினமும் காலையில் சென்பகமரத்திலிருந்து பூக்களைப் பறிக்கச்சொல்லி அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் பகவான் ஒரு பூ தருவது வழக்கம். அன்று, பூக்கள் உயரே கைக்கு எட்டாத தூரத்தில் இருந்தன. பக்தர் ஒருவரே, ஒரு ஸ்டூலைப் போட்டு, ஏற நின்று பூ பறிக்க ஆரம்பித்தார். பகவான் உடனே வெளியில் வந்து பக்தர் நோக்கி “ஜாக்கிரதையாய் செய்வோம். மரத்திற்கும் பாதிப்பு வராமல், உனக்கும் எந்த பாதிப்பும் வராதபடி பூக்களை பறிப்போம்” என்னு கூறி வாழ்க்கையை ஒட்டிய பேருண்மை ஒன்றை உணர்த்தினார்.
  19. பகவானுக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று துடித்த பக்தர் ஒருவர் பகவான் மிகவும் வியர்த்து களைத்திருந்த சமயம், தன்னை அவருக்கு விசிறுவதற்கு அனுமதிக்கும்படி கெஞ்சினார். பகவான் உடனே,“ நாமத்தைச் சொல்லிக்கொண்டு இருப்போம். அதுவே இந்தப் பிச்சைக்காரனுக்கு எல்லாவற்றையும் வட உயர்ந்த சேவை” என்று கூறினார்.
  20. ஒரு குளத்தின் அருகில் அமர்ந்து பார்க்கும் பொழுது, காற்றின் வேகத்தில் , தண்ணீர் அலை அலையாய் நகர்ந்தால் , சூரியனின் பிரதி பிம்பத்தைத் தெளிவாக காண முடியாது. அதுபோல் மனம் இங்கும் அங்கும் அலையும் பொழுது, உள்ளத்தில் கடவுளின. இருப்பை உணர்வது கஷ்டம். ஆனால் நாம் தொடர்ந்து கடவுளின. நாமத்தை உச்சரித்து வந்தால், எண்ண அலைகள் அடங்கி மனம் ஒருமுகப்பட்டு, அலைகளற்ற குளத்துநீர் போல், அமைதியாக நின்று விடும்.அப்பொழுதுதான் கடவுளைக் கான முடியும். ஆனால் தொடர்ந்து கடவுளை நினைவு கூர்தல் அவசியம். இள்ளொரு விதமும் உள்ளது. மூச்சுக்காற்றை அடக்கும் பொழுதும் எண்ண அலைகள் அடங்கும். அதன் வழியும் மளதை நிறுத்த முடியும். ஆனால் நாமம் சொல்வதே எளிது.
  21. “கடவுள் உங்கும் நிறைந்து இருக்கறார்.அவர்இல்லாத்இடமே இல்லை. அவர் மட்டுமே இருக்கறார்” என்ற இந்த உண்மையைத் திருப்பத்திரும்ப மனதில் கொண்டுவரவேண்டும். வாயாலும் திரும்பதிரும்ப மந்திரம் போல் சொல்லிக்கொண்டுருக்க வேண்டும். அறிவு பூர்வமாகவாவது அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.மற்றவற்றை என் தந்தை பார்த்து கொள்வார்.
  22. எங்கு இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் எந்த ஒரு வேலையை செய்யும்பொழுதும்“ இதை நான் எங்கும் நிறைந்துள்ள பகவானுக்காகவே செய்கிறேன்” என்று நினைவில் கொள்ளவேண்டும். அப்படி செய்ய முடியவில்லையானால், கடவுளின் நாமத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அதுவே, எல்லா சாதனைகளுக்கும் சமம்.
  23. என் தந்தை, எல்லா காரியங்களையும் அவர் போக்கிலேயே செய்வார். அ வருடய வழிகள், அறிவதற்கு கடினமானவை. அவர் ஏன் ஒரு காரியத்திற்கு, ஒரு குறிப்பிட்ட நபரை தேர்ந்தெடுக்கிறார், மற்றவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியாது. அதனால் அவர் மேல் நம்பிக்கை வைப்பது ஒன்றே நீ செய்ய வேண்டிய செயல். மற்றவற்றை அவர் பார்த்து கொள்வார். உன் குருவின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, அவருடைய சேவையை செய்து வா.
  24. என் தந்தை, யாரை, எந்த சூழ்நிலையில் வைக்கிறார் என்பது, தந்தையின் பணியைப் பொறுத்தது. தந்தையின் பணிக்கு உகந்தாற் போலவே, உலகில் எல்லாம் நடக்கிறது. தந்தை, இந்த பிரபஞ்சம் முழுவதையும் நடத்த வேண்டி இருக்கிறது.
  25. ஓரு பெரிய‌ மகாத்மாவிற்கு சேவை செய்வதற்கு வாய்ப்பு கிடைப்பது மிகமிக அரிது. அந்த சேவையும், அம்மகாத்மாவிற்கு மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படும்படி செய்வது ஒன்றே நாம் செய்ய வேண்டியது. இதுவே, கடவுளை அடைவதற்கு சிறந்த சாதனை. அப்படிப்பட்டவருக்கு கடவுள் உரிய நேரத்தில் உயர்ந்த அனுபவங்களை அளிப்பார்.
  26. குருவின்மேல் யாருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதோ, அவர்களை விதியின் விளையாட்டு பாதிக்காது.
  27. எங்கு நம்பிக்கையிருக்கிறதோ அங்கு விதி விளையாடாது.
  28. ஆரம்பகாலத்தில் இந்த பிச்சைக்காரன் ஒரு பெரும் கஷ்டத்திற்குள்ளான பொழுது, தந்தையிடம்,” ஏன் என்னை கைவிட்டீர்கள்?” என்று அழுதான். அப்போது ஒரு குரல் கேட்டது. அது, “ஏன் ராமநாமத்தை மறந்தாய்?” என்றது. நாமத்தை நாம் எப்பொழுதும் நினைவு கூர்ந்தவண்ணம் இருக்க வேண்டும். நாமத்தை மறக்கும் பொழுது, விதி விளையாடி விடும்.
  29. யாரிடத்தில் சுயநலம் இல்லையோ, அவரிடத்தில் கடவுள் வெளிப்படுகிறார். சிறிதளவு சுயநலம் இருந்தாலும் கடவுள் அவரிடத்தில் வெளிப்படார்
  30. எந்த நேரத்தில் எது நடந்தாலும் அது கடவுளின் இச்சையாலேயே நடக்கிறது. அது அவரின் கருனணயே! அதற்கு நமக்கு தேவையிருப்பதாலேயே அது நிகழ்கிறது. அதனால் வரும் நன்மை அப்போது புரியாவிட்டாலும் பின்னால் அது பெரிய ஆசீர்வாதமே என்று உணர்வோம்.
  31. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், எல்லாம் வெறும் தோற்றமே. இது சிறியது, இது பெரியது, இது நுண்ணியது, இது பரந்தது என்பது எல்லாமும் வெறும் தோற்றமே. எல்லாம் என் தந்தையே ஆகியிருக்கிறார். தந்தையே எல்லா வடிவங்களும் எடுத்து, தன் லீலைகளை பலவிதமாய் நடத்திக் கொண்டு வருகிறார்.
  32. நாம் கஷ்டப்படுவது பூர்வ ஜன்ம வினையினாலா என்று ஓர் அன்பர் கேட்டபொழுது, பகவான் சிரித்தவண்ணம், “நாம் கஷ்டப்படுவது கடவுளை மறப்பதனால்தான்; கடவுளை எந்த விதத்திலாவது நினைவு கொள்வது அவசியம்” என்று வலியுறுத்தினார்.
  33. இதோ இந்த மாமரத்தைப் பார். இதன் அடியிலுள்ள வேர்கள், கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் எல்லாம் சேர்ந்து ஒரே மரமாய் இருக்கின்றது. அது போல், இந்த பிரபஞ்சத்தில் இருப்பதெல்லாம் இனைத்து ஒரே ஒரு பரம்பொருளின் மூழுமையாக திகழ்கிறது.
  34. ஒரு சில மாதங்களே ஆன குழந்தையுடன் விளையாடிய வண்ணம் “இதோ பார், இந்த தலைமுடி, இந்த கைகள், கால்கள், நகங்கள், தோல், எலும்பு, நரம்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு உடலில், ஒரு வடிவமாய் உள்ளது. (சுற்றும் முற்றும் பார்த்து) அதுபோல், இவை எல்லாம் சேர்ந்ததே என் தந்தையின் மொத்த வடிவம். நாம் எல்லோரும் அவருடைய மொத்த வடிவத்தின் பற்பல அங்கங்களே! (புன்னகைத்து) இது, அது, இங்கு, அங்கு, எங்கேயும் அவர் மட்டுமே. இந்த பிச்சைக்காரனுக்கு மரணம் நிகழ்ந்தபோது இவன் எல்லா வேறுபாடுகளையும் இழந்து விட்டான். இவனுக்கு மரணம் நேர்ந்தபொழுது இவன் உண்மையில் வாழ ஆரம்பித்தான்!
  35. இந்த பிச்சைக்காரனுக்குப் பயமோ, தவறு செய்துவிட்டோம் என்ற நினைவுகளோ வருவதில்லை. எது நடந்தாலும் தந்தையின் ஆணையின்படி நடப்பதால் எல்லாம் சரியே. ஆனால், நீங்கள் எல்லோரும் இவனைப்போல் மனசாட்சியின்றி நடக்கக்கூடாது. (சிரிப்பு) எது சரியோ, அது மட்டுமே செய்ய வேண்டும். இவனை முன் மாதிரியாகக் கொள்ளக்கூடாது. இவன் மிகவும் மோசமானவன்! பைத்தியம்!
  36. ராமனிடமும், கிருஷ்ணனிடமும் நம்பிக்கை இல்லா விட்டால் இந்தப் பிச்சைக்காரனிடம் எப்படி நம்பிக்கை வரும்?
  37. ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் எல்லாம் இந்த பிச்சைக்காரனின் வாழ்க்கைச்சரிதங்களே. (சிரிப்பு) இப்படி எதாவது, இந்த பிச்சை காரன், பைத்தியம் போல் உளறிக் கொண்டிருப்பான். இவன் சொல்வதை நம்பி விடாதீர்கள். (சிரிப்பு)
  38. இவன் தன்னைப் பிச்சைகாரன் என்று சொல்லிக்கொள்ளும்பொழதே, இவன் நிறைய செல்வத்தை மறைத்து வைத்திருப்பதாக ஜனங்கள் கூறுகிறார்கள்! இவன் தன்னை ராஜா என்றோ, மஹாராஜா என்றோ சொல்லிக் கொண்டால், ஊர் ஜனங்கள் என்னதான் சொல்ல மாட்டார்கள்…!!
  39. ஒரு அன்பர் தான் காலையிலிருந்து இரவு 9 மணிவரை ஆபிஸிலேயே கழிந்து விடுவதாகவும், நாமம் சொல்லவோ, கடவுளை நினைக்கவே நேரமே இல்லை என்று முறையிட, பகவான், “நீ எங்கு இருந்தாலும் , எந்த வேலை செய்தாலும் திருவண்ணாமலையில் இருக்கும் இந்தப்  பிச்சைக்காரனுக்காக மட்டுமே நீ வாழ்வதாய் நினைத்துக்கொள். மற்றவற்றை என் தந்தை பார்த்துக்கொள்வார். வெறும் இந்த ஒரு நினைப்பு” நான் கடவுளுக்காக இந்த வாழ்க்கைவாழ்கிறேன். இந்த ஆபிஸில் செய்யும் வேலை கூட அவருடைய வேலையே” என்று நினைத்துக் கொண்டு வா. அது போதும்.
  40. நாம் எல்லோரும் கடவுளுக்காக மட்டுமே வாழவேண்டும். அவருக்காக மட்டுமே மடிய வேண்டும். மற்றவையெல்லாம் வீண்.
  41. இந்தப்பிச்சைக்காரனுக்கு யாரும் பக்தர்கள் கிடையாது. இவன் உங்கள் அனைவருக்கும் பக்தன். நீங்கள் எல்லோரும் தெய்வமே.
  42. நாமத்தை சொல்லிக்கொண்டே இரு. நாமம் உன்னை சாத்வீகமாக மாற்றிவிடும். அது உன்னுடைய முழு இயல்பையுமே மாற்றிவிடும்.
  43. கடவுளின் அருளினால் மட்டுமே ஒருவரால் கடவுளின் நாமத்தை தொடர்ந்து சொல்லிவர முடியும். ஆனால் நாம் நாமத்தைச்சொல்வதாக நினைத்தோமேயானால் நம் சாதனை பலன் தராது.
  44. சாதனையை தீவிரமாய் முயற்சியோடு செய்யவேண்டும். சோம்பியாயிருத்தல் கூடாது. ஆனால், ஆத்மதரிசனத்தைப்பற்றி கவலைப்படாதே.
  45. கடவுளைப்பற்றி ஒருமுகப்பட்ட மனம் வேண்டும் என்றால், மனம் எங்கெங்கு அலைகிறதோ, பார்வை எங்கெங்கு திரும்புகிறதோ, அங்கெல்லாம் அவரே இருக்கிறார் என்று நினைவில் கொள்ளவேண்டும். அவரே எல்லாமாய் இருக்கிறார்
  46. எப்படியேனும் நாமத்தை சொல்லிக் கொண்டிருத்தல் முக்கியம். மனம் அலைவதைப்பற்றிக் கவலைப்படாதே. அதனால் நாமம் சொல்வதை விட்டுவிடாதே. மனம் அலைவது என்பது எல்லோருக்கும் நடக்கக்கூடியதே . இந்தப்பிச்சைக்காரனுக்கும் அது உண்டு. (பெரும் சிரிப்பு)
  47. ஒருவர் நாமம் செல்லும்பொழுது மனம் அலைந்தால், அது ஒரு யந்திரம் போல் ஆகிவிடாதா என்று கேட்க, பகவான், “பரவாயில்லை.மனம் அலைந்தால் என்ன?அந்த நேரத்தில் உன் நாக்காவது அலையாமல் இருக்கிறதல்லவா? ” என்று கூறி வெடிச்சிரிப்பு சிரித்தார்.
  48. அறிவாளிக்கு, தன் குருவின் வார்த்தையும், அவர் தம் திருவடியுமே போதும். மற்றவர்களுக்கோ பகவத்கீதை போன்ற புத்தகங்களைப் படிக்கத் தேவை ஏற்படுகிறது.
  49. “யோகி ராம்சுரத்குமார்” என்ற நாமத்தை ஒருமுறையேனும் தன் வாழ்வில் உச்சரிப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.
  50. இங்கு ஒரு குழந்தை வந்திருந்தது. அந்த குழந்தையிடம், இந்தப் பிச்சைக்காரன், இந்தப் பிச்சைக்காரன் யார் தெரியுமா? என்று கேட்டான். (குரலில் நெகிழ்வுடன்) அந்த குழந்தை உடனே, “நீங்கள் கடவுள்’ என்று கூறிற்று!! அது மிகவும் சிறிய பெண் குழந்தை. அதற்கு எப்படி தெரிந்தது?! (மூக்கில் விரலை வைத்துக் கொண்டார்)
  51. இந்தப்பிச்சைக்காரனின் போட்டோவேண்டியோ அல்லது பணம் செலவழித்து இந்தப்பிச்சைக்க்காரன் இருப்பிடத்திற்கோ வர வேண்டிய தேவை இல்லை. இவன் நாமத்தை நினைவில் கொண்டாலே போதும். வேறு எதுவும் முக்கியம் இல்லை.
  52. இந்த மாதிரி ஒரு பிச்சைகாரன், உங்கள் மத்தியில் வாழ்வதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்பொழுது புரியாது. இந்த பிச்சைகாரன் சென்றபிறகு தான் தெரியும்…..
  53. தந்தையின் ஆசிர்வாதம் எப்பொழுதும் எல்லா பக்கத்திலிருந்தும் மழைபோல் பொழிந்து கொண்டேயிருக்கிறது. உனக்கு திறமை இருந்தால், பெற்றுக் கொள்.
  54. ஆந்தை இருக்கிறதே, அது என்ன செய்யும் தெரியுமா? பளீரென்று சூரிய வெளிச்சம் எங்கும் பரவி இருந்தாலும், அது தன் கண்களை மூடிக் கொண்டு, எங்கேயும் இருட்டாய் இருப்பதாய் நினைத்துக் கொள்ளும்! அதுபோல் சிலர், தங்கள் துக்கத்தை விடாப்பிடியாய் பிடித்துக்கொண்டு,”எங்கள் மேல் இறைவனுக்கு கருணையே இல்லை” என்று குறை கூறிக்கொண்டிருப்பர்!
  55. ஒரு பெண்மணி, தன் நகைகளெல்லாம் திருட்டு போய்விட்டதாய் கூறி, அழுது கொண்டே இருந்தாள். பகவான் தன் நாமத்தை திரும்ப திரும்பக் கூறி, அப்பெண்மணியை சிறிது நேரம் சொல்ல வைத்தார் .பின் அப்பெண்மணி மறுபடி அழ ஆரம்பித்துவிட்டார். பகவான் அதற்கு, “தொலைந்து போன தன் நகைகளை இவ்வளவு ஞாபகம் வைத்துக் கொண்டு, திரும்பத் திரும்ப அழுகிறாள். நாமம் எல்லாவற்றையும் விட பெரிய ஆபரணம். அதை ஞாபகம் வைத்துக் கொள்ள மறுக்கிறாள்!!” என்றார்.
  56. ஒரு பெரிய பிரமுகர் பகவானிடம், “சுவாமி,நான் தங்களுக்கு ஏதாவது சேவை செய்ய முடியுமா?” என்று கேட்டவுடன் பகவான் உடன்,”கடவுளை மறக்காமல் நினைத்துக் கொண்டு இருங்கள். அதுவே,இந்த பிச்சைக்காரனுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை” என்றார்
  57. இன்னொரு முறை ஒரு பிரமுகர், “சுவாமி, எனக்கு ஏதாவது உத்தரவு உண்டா?” என்று கைகூப்பி, கேட்டார்.  பகவான் சட்டென்று கைகூப்பி, “இல்லை இல்லை. இந்த பிச்சைக்காரனுக்கு உத்தரவிட முடியாது. தாங்கள் கடவுளை எப்பொழுதும், மறக்காமல் நினைவு கொள்ள வேண்டும் என்று தங்ககளைப் பிரார்த்தித்திக் கொள்கிறேன்” என்றார்.
  58. சுயநலமின்றி சேவை செய்யும்பொழுதே அது உண்மையான சேவையாகிறது. ஆனால் பலர், பேரும், புகழும், அதிகாரமும் மனதில் கொண்டே சேவை செய்கிறார்கள். அவர்கள் தங்களுக்கே சேவை செய்து கொள்கிறார்கள். கடவுளுக்கு அல்ல.
  59. ஒரு அயல்நாட்டுக்காரர் பகவானிடம், “என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி கூற முடியுமா?” என்று கேட்டார். பகவான் கைகூப்பி “இந்த பிச்சைக்காரனுக்கு நிகழ்காலம் கூட தெரியாது. எதிர்காலம் பற்றி எப்படி தெரியும்?” என்று கேட்டு இடியென சிரித்தார். பிறகு, சட்டென்று சிரிப்பை நிறுத்தி தீவிர முகபாவத்துடன், “நண்பரே! கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் என் தந்தையே! அவர் மட்டுமே இருக்கிறார். வேறு எதுவும் இல்லை” என்று கூறினார்.
  60. ஆசைகளை  குறைத்துக் கொண்டே வா மிகச் சில தேவைகளோடு வாழ பழகிக்கொள்.எத்தனைக்கு எத்தனை ஆசைகளை குறைத்துக்கொள்கிறாயோ, அத்தனைக்கு அத்தனை வாழ்வில் மகிழ்ச்சியுறுவாய்
  61. “மகிழ்ச்சி என்றால் என்ன?” என்று ஒரு அன்பர் கேட்ட பொழுது, பகவான், “எங்கு வாழ்ந்தாலும்,எந்த நிலையில் வைக்கப்பட்டாலும், வாழ்வில் எனக்கு ஒரு குறையும் இல்லை என்ற திருப்தியுடன் வாழும் பொழுது வருவதே மகிழ்ச்சி ” என்றார்
  62. ஒரு முறை தோட்டத்தில் பக்தர்களுடன் அமர்ந்திருந்தபொழுது, நிறைய எறும்புகள், அவர் கால்மீதும், உடல்மீதும் ஏற ஆரம்பித்தன.இங்கு எறும்புத் தொல்லை அதிகம் என்று கூறி, பக்தர்கள், எறும்புகளை அகற்ற முற்பட்டபொழுது,”இந்தத் தோட்டம் அவர்களுடைய வாழுமிடம். இங்கிருக்கும் அவர்களை அகற்றக்கூடாது, அவைகளுக்கு வாயிருந்தால் நம்மைப் பார்த்து எங்கள் எல்லையில் வந்து எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? என்றல்லவா கேட்கும்” என்று கூறி சிரித்தார்.
  63. இந்த பிச்சைக்காரனைப் பற்றி யார் யார் எங்கிருந்து நினைத்தாலும் அல்லது பேசினாலும், அங்கு என் தந்தை உடனே வந்து மறைந்து நின்று ஆசீர்வசிக்கிறார்.
  64. யாரிடத்தில் சுயநலம் என்பது சிறிதும் இல்லை யோ, அவரிடத்தில் கடவுள் இறங்கி, முழுவதும் ஆட்கொண்டுவிடுகிறார். ஆனால் சிறிதளவேனும் சுயநலம் இருந்தாலும், கடவுள் நுழைவதில்லை.
  65. கடவுள் உன்னை எந்த சூழ்நிலையில் வைத்தாலும் அதை மனமார ஏற்றுக் கொள்வதோடு, அதற்காக கடவுளிடம் நன்றியுடன் நடந்துகொள். ஏனெனில், அது கடவுளின் ஆசீர்வாதமே.
  66. நாம் எந்த காரியம் செய்தோமானாலும், அதை கடவுளுக்காகவே என்ற பாவனையுடன் செய்தோமானால், நம் ஒவ்வொரு மூச்சும், பேச்சும், செயலும் அவருக்கு சமர்ப்பித்து வந்தோமானால், பின் சரணாகதி வருகிறது. கடவுள் அதை ஏற்றுக்கொள்ளும்பொழுது, நம் உடல், மனம், புத்தி அனைத்தையும் ஆட்கொள்கிறார். அப்பொழுதே, நாம் அவருடைய கருவியாக ஆகிறோம். பின்பு, அவரே நம்மூலம் அவர் வேலையைச் செய்யத் தொடங்கி விடுகிறார். நம் ‘தனித்துவம்’ என்ற நிலை அழிந்து விடுகிறது.
  67. எல்லாரும் சொல்வார்கள், “பற்றற்ற தன்மை, குருவின் மேல் நம்பிக்கை, நாம உச்சாரணை, இவை எல்லாம், கடவுளை அடைவதற்கு தேவை” என்று. இந்த பிச்சைக்காரன் சொல்கிறான், “குருவிடம்   நம்பிக்கை வைத்தால் போதும், மற்றவை தானாகவே வந்துவிடும்” என்று.
  68. கடவுள் மட்டுமே உனக்கு வேண்டும் என்று நீ விரும்பினால், ஏன் ‘மற்றவைகள்’ என்று ஒன்று இருப்பதாய் நினைத்து ஏற்றுக் கொள்கிறாய்?
  69. திரும்பத் திரும்ப ‘கடவுள் ஒருவரே என் லட்சியம்’ என்று நினைவில்கொண்டு, பெயர், புகழ், தனிப்பட்ட ஆசைகள் ஆகியவற்றை ஒதுக்கி வரவேண்டும். அப்பொழுதுதான் கடவுளை அடையமுடியும்.
  70. கடவுளின்மேல் ஒருமுகப்பட்ட மனது எப்பொழுது வரும்? “நீ காண்பவை எல்லாவற்றிலும் அவர் மட்டுமே இருக்கிறார். அவரே எல்லாவற்றையும் இயக்குகிறார்” என்று சதா நினைவில்கொண்டு வந்தால் மட்டுமே!
  71. எது, எப்படி நடந்தாலும், அது தந்தையின் குறைவற்ற ஆசீர்வாதமே. இருக்கும் சூழ்நிலையில் எது மிகுந்த நன்மை தருமோ, அதுமட்டுமே அந்த நேரத்தில் நடக்கிறது.அதற்கு தேவையிருப்பதாலேயே அது நடக்கிறது. அப்படி நடப்பதால், அது அந்த தனி உயிருக்கு மட்டுமல்ல, இந்த பிரபஞ்சம் முழுவதிற்கும்நன்மை பயக்கிறது. பிரபஞ்சத்தை கணந்தோறும் நடத்தி வரும் தந்தையின் வேலைக்கு எது சாதகமோ, எது தேவையோ அது மட்டுமே நடக்கிறது.
  72. கடவுள், அவருடைய பணிக்கென்று எடுத்துக் கொண்ட பக்தர்களை, முழுவதும் தூய்மைப்படுத்துவதற்காகவே,குறிப்பிட்ட சில சூழ்நிலைகளை உருவாக்குவார். அவை துன்பத்தைத்தந்தாலும், தூய்மைப்படுத்திவிடும்.
  73. இந்த பிச்சைக்காரனின் பெயர் சதா ஆகாசத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
  74. நண்பா்கள் இங்கு வரும்பொழுது, இந்த பிச்சைக்காரன் அவா்களிடம், “நீங்கள் யோகி ராம்சுரத்குமாா் நாமத்தை சொல்லிக் கொண்டிருந்தாலே போதும், தந்தை உடன்உதவி அனுப்பிவிடுவாா். பிராா்த்தனை என்று

தனியாக பண்ணத்தேவையில்லை” என்று சொல்வது வழக்கம்.

  1. இந்த பிச்சைக்காரன் பெயா்சொல்ல முடியா விட்டாலும், யாரேனும் இவனைப் பற்றியோ, இவனுடன் இணைந்த நிகழ்ச்சி பற்றியோ,இவன் நடை, உடை பாவனையையோ, ஏன் இந்த விசிறி, கொட்டாங்கச்சியை நினைத்தால்கூட, தந்தை ஆசீா்வாதம் வழங்குகிறாா்.
  2. நாமத்தைச் சொல்லிக்கொண்டிருந்தால் அது உன் கவலையையும், வேதனையையும் அகற்றி விடும்.
  3. காளிதாசனின் ரகுவம்சத்தில் உள்ள, “சொல்லும் பொருளும் பிாிக்க முடியாதவை” என்ற இந்த வாிகளின் அா்த்தம் என்ன? நீங்கள் ‘ ராமன் ‘ என்று சொல்லும்பொழுது, ராமன் உங்களோடு இருக்கிறான். ‘சிவா’ என்று சொல்லும்பொழுது, சிவன் கூடவே இருக்கிறாா். ‘யோகி ராம்சுரத்குமாா்’ என்று

சொல்லும்பொழுது என் தந்தை கூடவே இருக்கிறாா்.

  1. ‘யோகி ராம்சுரத்குமாா்’ என்ற நாமம் சொல்லும் பொழுது பகவான் என்றெல்லாம் சோ்த்துக் கொள்ளத் தேவையில்லை. அதே மாதிாி, யோகியை விட்டு ராம்சுரத்குமாா் என்றும் சொல்லக்கூடாது. உலகில் பல ராம்சுரத்குமாா் கள் இருக்கிறாா்கள். ஆனால், ஒரே ஒரு யோகி ராம்சுரத்குமாா் தான் இருக்கிறாா்.
  2. நாமத்தை சொல்லுதலே சரணாகதி; நாமத்தை சொல்லுதலே சமாதி.
  3. நிறைய சாதனை செய்யும்பொழுது, நாம் அமைதியாகவும், பொறுமையாகவும், சந்தோஷமாயும் ஆகிவிடுகிறோம்.
  4. எது சாி, எது தவறு என்று வினவிய ஒரு அன்பாிடம்,” இந்த சுயநலம் தவறு, மற்றவா்களிடமிருந்து பிாித்து, உன்னை நீ தனி உயிராய் பாா்ப்பது தவறு. இதுவே, சுயநலம் ஆகிறது. எல்லோரும் ஒன்றே, இருப்பது ஒன்றே என்று நினைப்பதே சாி, உண்மை. எல்லாம் இணைந்த ஒரு வாழ்வு மட்டுமே உலகில் நடக்கிறது” என்பதே உண்மை.
  5. இருப்பது ஒரு உயிா் வாழ்க்கை மட்டுமே. அது தந்தையின் இருப்பு மட்டுமே. எல்லாம் இணைந்து மொத்தமாய் ஒரே மனது, ஒரே உயிா்தான் உள்ளது. இரண்டாவது என்பது இல்லை. இதுவேஅத்வைதம். ரமண பகவான், இதை ஆத்மன் என்கிறாா். சுவாமி ராம்தாஸ், இதை ராம் என்கிறாா். இந்த பிச்சைக்காரன் “என் தந்தை” என்கிறான்.
  6. நம்பிக்கை கடவுளை விடவும் பொியது. எல்லா மதங்களையும் விடப் பொியது.
  7. பெரியவர்கள் சொல்கிறார்கள், “எல்லோர் இடத்திலும் அன்பு வையுங்கள். யாரையும் வெறுக்காதீர்கள்’ என்று இந்தப்பிச்சைக்காரன் சொல்கிறான், “தந்தையே எல்லோராகவும் ஆகியுள்ளார். அதனால் என் தந்தையிடம் அன்பு வையுங்கள். அது தானாகவே எல்லாரிடமும் அன்பாய் மலர்ந்துவிடும்” என்று. எல்லாவற்றையும் அறிவது என்பது என்ன? எல்லாவற்றிலும் அன்பு வைப்பது, எல்லாவற்றையும் அறிவது ஆகும்.
  8. இந்த ஆஸ்ரமத்தில் நுழைந்தவர்கள் ஒருவர்கூட ஒருபொழுதும் வெறுங்கையோடு திரும்ப மாட்டார்கள். என் தந்தையின் அருள் அவர்கள் மேல் மழை போல் பொழிகிறது. அவர்கள் அதை உணர்ந்தாலும், உணராவிட்டாலும், இதுவே உண்மை.
  9. இந்த ஆஸ்ரமத்திற்கு வருபவர்கள் அமைதியாக வந்து, இங்கு பரவியுள்ள தந்தையின் அருளை சிறிதேனும் உணர முற்பட வேண்டும்.
  10. ஒருவர் சந்தோஷமாக இருக்க விரும்பினால் கடவுளை சந்தோஷப்படுத்த வேண்டும். கடவுளை சந்தோஷப்படுத்துவது என்பது அவரது நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே!
  11. இந்தப் பிச்சைகாரனின் நாமம் ஒவ்வொன்றும் அதைச் சொல்பவர் மட்டுமன்றி, இந்த பிச்சைகாரன், இவன் தந்தையின் பணி, ஏன் இந்த உலகம் முழுவதற்குமே உதவும்.
  12. இந்த ஆஸ்ரமம் முழுவதுமே தியானக்கூடம்தான். யார் உள்ளே நுழைந்தாலும், அவர்கள் மனதில் இயற்கையாகவே தியானத்தில் இருப்பது போன்ற உணர்வு எழும். இதை அவர்கள் உணர்ந்தாலும், உணரும் சக்தி இல்லாவிட்டாலும், இதுவே உண்மை.
  13. தெய்வீக உணர்வு என்னவென்றே அறியாத பாமரர்கூட, ஆஸ்ரமத்தில் நுழைந்தவுடன் சட்டென்று தந்தையின் தெய்வீக த்தை உணரும் படியாக, இந்த ஆஸ்ரமத்தை என் தந்தை நிர்மாணித்துள்ளார்.
  14. “வெகுநாள் நாமம் சொல்லியும், பகவானுடன் கூடவே இருந்தும், அதிக முன்னேற்றம் இல்லாதது போலும், உண்மையில், உணர்ச்சி வெளிப்பாடுகள் இன்னும் அதிகமாக இருப்பது போலவும் தோன்றுவதன் காரணம் என்ன? ” என்று ஒரு பக்தர் பகவானிடம் வினவியபொழுது, ஆஸ்ரம கட்டுமான பணி நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, “இங்கே பார்! இந்த இடத்தில் எவ்வளவு பெரிய பள்ளங்கள் தோண்டி வைத்துள்ளனர். மணலும், சிமெண்டும் அங்கங்கு குவிந்து, பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது! ஆனால், இவையெல்லாம் நடந்தால்தான், ஒருநாள் இங்கு அழகான ஒரு மண்டபம் உருவாகி நிற்கும். அது போல் தான் சாதகனின் வாழ்க்கையும்” என்றார்.
  15. (தன்னை தலையிலிருந்து கால் வரை சுட்டிக்காட்டி) யார் இந்த பிச்சைகாரனை இந்த வடிவம் என்று மட்டும் நினைக்கிறார்களோ அவர்கள் குறுகிய மனப்பான்மையும், சுய நலமும், நீங்கப் பெறாது, துன்பத்திற்கு உள்ளாவார்கள். யோகி ராம்சுரத்குமார் எங்கும் நிறைந்தவர். அவர் எல்லோர் இடத்திலும், உள்ளும், புறமும் எங்கும் நிறைந்த இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  16. யாரேனும், அவர்கள் உள்ளிருந்து இந்த பிச்சைகாரன் எல்லாவற்றையும் நடத்தி வைக்கிறான் என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்யடுவார்களெனில், அவர்களை நான் இந்த உலக மாயை யிலிருந்து உடன் விடுவிப்பேன்.
  17. “ஆஸ்ரமங்களினால் பயன் ஒன்றுமில்லை. அவைகள் எந்த மகாத்மாக்களையும் உருவாக்குவதில்லை. மேலும், அவைகளில் அரசியல், பலவித முரண்பாடுகள், பழிபாவங்கள்கூட ஆஸ்ரமங்களைப்பற்றி வெளிவருகின்றனவே” என்று ஒரு அன்பர் ஆட்சேபித்தபொழுது பகவான், “கொதிக்கும் வெயிலில், அவனுடைய நிலத்தில் வெகுநேரம் வேலை செய்யும் குடியானவன், களைப்புறும்பொழுது, அருகில் ஒரு மரம் இருந்தால், அம்மர நிழலில் சென்று சற்று ஓய்வெடுப்பான். அதனால் களைப்பு நீங்கப்பெற்று, புத்துணர்வுடனும், புதுமலர்ச்சியுடனும் வேலைக்குத் திரும்புகிறான். ஆஸ்ரமங்கள், அந்த மரத்தைப்போல, மன அமைதி கொடுக்கும் இடங்கள். மேலும், ஆஸ்ரமங்கள் மகாத்மாக்களை உருவாக்குவது இல்லை என்று கூறுவது உண்மையல்ல. மாதாஜி கிருஷ்ணா பாய், சுவாமி சச்சிதானந்தா ஆகியோர் ஆனந்தாஸ்ரமத்தில் உருவானவர்களே.
  18. எப்படி சிவபெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டு, அமிர்தம் கிடைக்கும்படி செய்தாரோ, அதுபோல், என் தந்தை, யார் இந்த பிச்சைக்காரனுக்காக உழைக்கிறார்களோ  அவர்களுக்கு ஏற்படும் கஷ்டமான சூழ்நிலைகளை பெரும் ஆசிர்வாதங்களாக மாற்றிவிடுவார்
  19. இந்த உலகில், யாரும் கடுமையான விமரிசனத்திற்கு ஆளாகாமல் இருப்பது இல்லை. பெரிய அவதாரங்களான ராமன், கிருஷ்ணன் கூட இன்றைக்கு இந்த உலகில் இருந்திருய்யார்களேயானால், அவர்களும், அதற்கு ஆளாகியிருப்பர். (சிரிப்பு) இதை நாம் பொறுத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். இடத்தை விட்டு அகலத் தேவையில்லை.
  20. எப்படி வேரில் ஊற்றப்படும் தண்ணீர், ஓரு மரத்தின் கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் எல்லாவற்றிற்கும் உயிர்ச்சத்தால் பரவுகிறதோ, அதுபோல், ஒரு மகாத்மாவை நன்கு பேணி, பார்த்துக்கொள்வது, உலகில் உள்ள எல்லோரையும் பேணுதற்கு சமம்.
  21. எங்கோ சென்று குகைகளில் அமர்ந்து தவம் செய்யத் தேவையில்லை. என்ன சாதனை செய்ய வேண்டுமானாலும், அதை இந்த ஆஸ்ரமத்திலேயே செய்யலாம்
  22. இந்த பிச்சைக்காரனுக்கு ஸ்ரீ மத் ராமாயணமும், மகாபாரதமும் மிகவும் பிடித்தமானவை. ராம நாமமும், கிருஷ்ண நாமமும் இவனுக்கு மிகவும் இஷ்டம். யாரேனும் இந்த பிச்சைக்காரன் பெயரைத் தான் பாடவேண்டும் என்று வலியுறுத்தினால் அவர்கள் பெரிய பாவம் செய்கிறார்கள்.
  23. எல்லா வடிவங்களும், எல்லா நாமங்களும்  என் தந்தையினுடையதே! அகண்டமான என் தந்தை எல்லா வடிவங்களுமாய் ஆகியிருக்கிறார்- சமுத்திரத்தின் அலைகள் போல- தங்கத்தில் செய்யப்பட்ட ஆபரணங்கள் போல. ஸ்ரீ ரமண பகவான், சுவாமி ராமதாஸ், ஸ்ரீ அரபிந்தோ, காஞ்சி பரமாச்சாரியார் போன்ற பெரும் ஞானிகளும், முற்காலத்து ரிஷிகளும் அப்படிச் சொல்லி இருக்கிறார்கள்; அவர்கள் பேரறிஞர்கள்; உண்மையை அறிந்தவர்கள்; அவர்கள் வார்த்தையில் நம்பிக்கை வையுங்கள்; நம்பிக்கையைவிட உயர்ந்தது எதுவும் இல்லை.
  24. ஒரு குறிப்பிட்ட சுவாமி ஆத்மானுபூதி பெற்றவரா இல்லையா என்று ஒரு அன்பர் பகவானைக் கேட்டபொழுது, பகவான் பட்டென்று, ” முதலில் நீ ஆத்மானுபூதி அடையப் பார், பின்னால் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் ” என்று கூறி வாயடைத்தார்.
  25. உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் கண்டிப்பாக யோகாசனப் பயிற்சி செய்ய வேண்டும்- அப்பயிற்சிகள் பிராணவாயுவை, உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் நன்கு செலுத்தி, வியாதியின் றி உடலை ஆரோக்கியத்துடன் செயல்பட வைக்கும்
  26. ஒரு முறை சாஸ்திரி ஒருவர் இந்த பிச்சைக்காரனிடம் வந்து, “என் பையன் மந்த புத்தியுடன் இருக்கிறான்” என்று குறைப்பட்டுகொண்டார். இந்த பிச்சைக்காரன்,” அவனுக்கு பூணூல் போட்டு, நன்றாக சந்தியா வந்தனம் செய்ய ஒரு சாஸ்திரியையும் ஏற்பாடு பண்ணுங்கள்” என்று கூற, அதன்படி அவர் செய்தார். சில மாதங்களுக்கு பிறகு, சாஸ்திரி வந்து, தற்போது தன் பையன் படிப்பில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளதாயும், சுறுசுறுப்பாய் இருப்பதாயும் மகிழ்ச்சியோடு கூறினார். காயத்ரி மந்திரம் சொல்ல சொல்ல புத்தி கூர்மையும், தெளிவும் அடைகிறது.
  27. பிச்சை எடுப்பது இந்தியாவில் ஒரு குற்றம் அல்ல; இந்த புனித பூமியில் சாதுக்கள் பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்து இருக்கின்றனர். இந்தியா, பெரிய பெரிய மகாத்மாக்களின் லீலா பூமி. பெரும் மகாத்மாக்கள் பிச்சைக்கார்கள் உருவிலே வருவதுண்டு. இந்த மண்ணில், பிச்சைகாரர்களைக் கைது செய்தால், மகாத்மாக்கள் இந்நாட்டை விட்டு சென்று விடுவர். (சுவாமியின் கண்களில் கண்ணீர்) அவ்வளவு தான்!  மகாத்மாக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் தான், அவர்கள் அருள்மிகு லீலைகளை இங்கே நிகழ்த்த முடியும். பிச்சைக்காரர்களை வேதங்கள் அனுமதிக்கின்றன. வேதங்களை தந்த மகரிஷிகள், எல்லாம் அறிந்த ஞானிகள், வேதங்களும், வேதம் ஓதும் வேதியர் களும் காப்பாற்றப்படவேண்டும்.” இந்தியா, ஐரோப்பா போன்ற நாடுகளைப்போல் இருக்கவேண்டும். பிச்சை எடுப்பதை ஒழிக்க வேண்டும்” என்று கூறினால் அது மிகவும் தவறு. பிச்சைக்காரனுக்கு ஒருவேளை உண விடுவதால், அவன் ( பிச்சைக்காரன்) கோடீஸ்வரனாகப்போவதில்லை.
  28. வேதங்களே எல்லாம். வேதம் இல்லையென்றால், இந்தியா இல்லை.  வேதங்களை எப்பாடு பட்டேனும் காக்க வேண்டும். சமஸ்கிருதம் புரிவதில்லை. எதற்கு ஸ்லோகங்களை மனப்பாடம் செய்ய வேண்டும். சமஸ்கிருதத்தை எடுத்து விடலாம் என்றெல்லாம் சொன்னால், அது மிகத்தவறு. எங்கெல்லாம் வேதம் ஓதுகிறார்களோ அங்கெல்லாம் போய், காதாலாவது கேளுங்கள். அது மிகவும் நல்லது. புரியாவிட்டால்கூட, வேதம் ஓதுவதும், கேட்பதும் மிகவும் நல்லது. காஞ்சி பரமாச்சார்யார் வேதத்திற்கும், வேதம் ஓதுபவர்க்கும், ரக்ஷணை செய்ய பலவிதங்களில் வழி ஏற்படுத்தி உள்ளார். அதை நாம் நன்றியோடு பாராட்ட வேண்டும்.
  29. “தந்தைதானே எல்லோரையும், எல்லாவற்றையும் இயக்கி வருகிறார். தங்களை இயக்குகிற தந்தையே, எங்களையும் இயக்குகிறார் என்றால், ஏன் தங்களுக்கும் எங்களுக்கும் இவ்வளவு வித்தியாசம்?” என்று வினவிய பக்தரிடம், பகவான், ” தந்தை இந்த ப் பிச்சைக்காரனை நேரடியாக இயக்குகிறார். இங்கு தனி வியக்தி எதும் இல்லை. உங்களிடம், உங்கள் மாயையின் (அகங்காரம்) மூலம் இயக்குகிறார்” என்று கூறினார்.